18 வயது நிரம்பியோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை- ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற இளைஞர்கள்


18 வயது நிரம்பியோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை- ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற இளைஞர்கள்
x
தினத்தந்தி 1 May 2021 7:30 PM GMT (Updated: 1 May 2021 7:30 PM GMT)

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட தடுப்பூசி மையங்களில் 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை. இதனால் இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

நெல்லை, மே:
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட தடுப்பூசி மையங்களில் 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவில்லை.

கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், தடுப்பூசிக்கான தேவையும் அதிகரித்து உள்ளது. ஆரம்பத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், அதை தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட மேலும் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

ஏற்கனவே தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டும் 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 
தடுப்பூசி மருந்து கூடுதலாக வந்த பிறகு தடுப்பூசி அனைவருக்கும் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் 18 வயது நிரம்பியோருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது.

ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்

இதையொட்டி ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் கடந்த 28-ந்தேதி முதல் இணையதளம் மூலம் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு செய்தனர்.
நேற்று 1-ந்தேதி முதல் தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்திருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. 
அதன்படி நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமுக்கு நேற்று 18 வயது நிரம்பிய இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தனர். அவர்கள் தங்களது செல்போனில் முன்பதிவு செய்துள்ளதற்கான ஆதாரங்களையும் காண்பித்தனர்.
ஆனால் அங்கிருந்த பணியாளர்கள் தங்களுக்கு 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான எந்த உத்தரவும் வரவில்லை. மேலும் குறைந்த அளவே தடுப்பூசி மருந்து இருப்பதால் அவை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் போடப்பட்டு வருகிறது என்று பதில் அளித்தனர். இதனால் அவர்களுக்கு இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிற தடுப்பூசி மையங்களிலும் 18 வயது நிரம்பிய எவருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை.

Next Story