கடையம் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை; மின்கம்பம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
கடையம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மின்கம்பம் ரோட்டில் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடையம், மே:
கடையம் பகுதியில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்கம்பம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலத்த மழை
தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வள்ளியம்மாள்புரம் மெயின் ரோட்டில் மரம் சாய்ந்தது. இதேபோல் தெற்கு மடத்தூர்- வெங்கடம்பட்டி செல்லும் சாலையில் நீரேற்று நிலையத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த வாகை மரம் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் அங்கிருந்து வெங்கடாம்பட்டி செல்லும் சாலையில் உயர் மின் அழுத்த மின்கம்பம் ரோட்டில் சாய்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தெற்கு மடத்தூரில் பிள்ளையார் கோவில் பின்புறம் உள்ள மிகவும் பழமை வாய்ந்த அரசமரம் பாலத்தில் சாய்ந்து ரோட்டோரமாக விழுந்து கிடந்தது. மேலும் ஆங்காங்கே சிறு சிறு மரங்களும் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டது.
விவசாயி படுகாயம்
கடையம் அருகே உள்ள சொக்கநாதன்பட்டியை சேர்ந்தவர் விவசாயி முத்தையா (வயது 63). இவர் நேற்று மாலை தனது மருமகன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் மோட்டார் அறை ஓரமாக ஒதுங்கியபோது அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
கடையநல்லூர், அச்சன்புதூர், இடைகால், வடகரை மற்றும் பாவூர்சத்திரம் ஆகிய பகுதிகளிலும் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பகல் நேரத்தில் கடினமான வெயில் மற்றும் அனல் காற்று வீசிய நிலையில் நேற்று மாலை பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லையில் நேற்று காலை, மதிய நேரம் வெயில் வாட்டி வதைத்தது. பிற்பகலில் வானம் மேக மூட்டமாக காட்சி அளித்தது. ஒருசில மழைத்துளிகள் மட்டும் பெய்து விட்டு சென்றது. இதனால் மாலையில் குளிர்ந்த காற்று வீசியது.
மழை அளவு
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 24 மணி நேரத்துடன் முடிவடைந்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
அடவிநயினார் -12, குண்டாறு -3, ஆய்குடி -4, செங்கோட்டை -2, தென்காசி 7.
Related Tags :
Next Story