திருச்சியில் பூட்டி ‘சீல்' வைக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் திடீர் தீ விபத்து


திருச்சியில் பூட்டி ‘சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 1 May 2021 8:39 PM GMT (Updated: 1 May 2021 8:39 PM GMT)

திருச்சியில் பூட்டி ‘சீல்' வைக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

திருச்சி, 
திருச்சியில் பூட்டி ‘சீல்' வைக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
‘சீல்’ வைக்கப்பட்ட டாஸ்மாக் கடை
திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. நேற்று மே தினம் மற்றும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் டாஸ்மாக் கடை விடுமுறை விடப்பட்டு பூட்டி ‘சீல்' வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் அந்த டாஸ்மாக் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் உள்ளே உள்ள மதுப்பாட்டில்கள் சூட்டில் டமார், டமார் என வெடித்து தீ பற்றி எரிய தொடங்கியது.
தீயணைப்பு வீரர்கள்
இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நிலைய அலுவலர் மெல்கியூ ராஜா தலைமையில் 2 வண்டிகளில் 15 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் அங்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் அனுசுயா, உதவி அலுவலர் கருணாகரன் ஆகியோரும் வந்து தீயணைக்கும் பணியினை விரைவுப்படுத்தினர்.
மேலும் தீயை அணைப்பதற்கு மாநகராட்சியில் இருந்து 2 தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
மதுபாட்டில்கள் நாசம்
இந்த தீவிபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் நாசமாகி உள்ளதாக கூறப்படுகிறது. விரைந்து செயல்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால் அருகில் இருந்த ஜுவல்லரி மற்றும் ஜவுளி கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தீ விபத்து குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story