வளநாடு அருகே டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் பலி மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு திரும்பிய போது பரிதாபம்


வளநாடு அருகே டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் பலி மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு திரும்பிய போது பரிதாபம்
x
தினத்தந்தி 2 May 2021 2:09 AM IST (Updated: 2 May 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

வளநாடு அருகே டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழை கொடுத்துவிட்டு வந்தவர் உறவினருடன் பலியானார்.

துவரங்குறிச்சி, 
வளநாடு அருகே டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழை கொடுத்துவிட்டு வந்தவர் உறவினருடன் பலியானார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

மகளுக்கு திருமணம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 52). இவருடைய மகளுக்கு வருகிற 16-ந்தேதி திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் மகளின் திருமண அழைப்பிதழை திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள உறவினர்களுக்கு கொடுப்பதற்காக மகாலிங்கம் திட்டமிட்டு இருந்தார். அதற்காக தனது உறவினரான மேலத்தானியத்தை சேர்ந்த சண்முகத்தை(28) அழைத்துக்கொண்டு நேற்று அவர் மணப்பாறைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். 

டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த கார்

அங்கு அவர்கள் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டனர். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வளநாடு அருகே மினிக்கியூர் பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் வந்த போது, எதிரே மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது. 

இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் எதிர்புறம் சென்று மகாலிங்கத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர், கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கார் மோதியதில் 2 பேர் பலி

கார் மோதியதில் மகாலிங்கம், சண்முகம் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அந்தவழியாக வந்தவர்கள் காரில் சிக்கிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் மகாலிங்கம், சண்முகம் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகளின் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க சென்றவர் உறவினருடன் பலியான சம்பவம் சடையம்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story