ஈரோடு மாவட்டத்தை மிரள வைக்கும் தொற்று பரவல் கொரோனாவுக்கு வாலிபர் உள்பட 5 பேர் பலி; புதிதாக 378 பேருக்கு பாதிப்பு


ஈரோடு மாவட்டத்தை மிரள வைக்கும் தொற்று பரவல் கொரோனாவுக்கு வாலிபர் உள்பட 5 பேர் பலி; புதிதாக 378 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 1 May 2021 9:39 PM GMT (Updated: 1 May 2021 9:39 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு வாலிபர் உள்பட 5 பேர் பலியானது மக்களை மிரள வைத்துள்ளது. மேலும், புதிதாக 378 பேருக்கு தொற்று உறுதியானது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு வாலிபர் உள்பட 5 பேர் பலியானது மக்களை மிரள வைத்துள்ளது. மேலும், புதிதாக 378 பேருக்கு தொற்று உறுதியானது.
மிரள வைக்கும் கொரோனா
கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை இல்லாத வகையில் தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் கொரோனாவுக்கு உயிரிழப்பு குறைவாக இருந்து வந்தது ஓரளவுக்கு ஆறுதலை அளித்து உள்ளது.
இந்தநிலையில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் உயிரிழந்து இருப்பது பொதுமக்களை மிரள வைத்து உள்ளது. அதிலும், 32 வயது வாலிபர் ஒருவர் கொரோனா தாக்கி பரிதாபமாக இறந்து உள்ளார். ஈரோட்டை சேர்ந்த அவர் கடந்த 27-ந் தேதி கோவை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி 28-ந் தேதி இறந்தார்.
5 பேர் பலி
இதே போல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 48 வயது நபர் ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி 28-ந் தேதி உயிரிழந்தார். மேலும், கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த  67 வயது முதியவர் 29-ந் தேதி கொரோனாவுக்கு பலியானார்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 86 வயது முதியவரும், 72 வயது முதியவரும் சிகிச்சை பலனளிக்காமல் 29-ந் தேதி பலியானார்கள். கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகி இருப்பதால் மாவட்டத்தில் மொத்த சாவு எண்ணிக்கை 166 ஆக உயர்ந்தது.
378 பேர் பாதிப்பு
இதற்கிடையே கொரோனாவால் நேற்று புதிதாக 378 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்து 617 ஆக உயர்ந்தது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது 3 ஆயிரத்து 214 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று 357 பேர் கொரோ னாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். இதுவரை மொத்தம் 18 ஆயிரத்து 237 பேர் குணமடைந்து உள்ளார்கள்.

Next Story