2 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.10¾ கோடிக்கு மது விற்பனை
2 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.10¾ கோடிக்கு மது விற்பனை ஆனது.
ஈரோடு
2 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.10¾ கோடிக்கு மது விற்பனை ஆனது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதன் தடுப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.
இதனால் கடந்த வாரம் சனிக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட மது பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அன்று ஒரு நாள் மட்டும் மாவட்டம் முழுவதும் ரூ.10 கோடிக்கு மேல் மது விற்பனை ஆனது.
214 டாஸ்மாக் கடைகள்
ஈரோடு மாவட்டம் முழுவதும் மொத்தம் 214 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இவற்றுடன் 128 பார்களும் இயங்கி வருகின்றன. இங்கு தினந்தோறும் சராசரியாக ரூ.4 கோடி வரை மதுபானம் விற்பனையாகி வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகும்.
தற்போது தொற்று வேகமாக பரவி வருவதால் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. தற்போது 128 பார்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டுள்ளது.
ரூ.10¾ கோடிக்கு விற்பனை
இந்நிலையில் நேற்று மே தினம் என்பதாலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு மற்றும் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளதாலும் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
குறிப்பாக மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடந்தது. வெயில் காலம் என்பதால் அதிக அளவில் பீர் விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் ரூ10 கோடியே 77 லட்சத்து 65 ஆயிரத்து 350-க்கு மது விற்பனையானது.
Related Tags :
Next Story