நண்பர்கள் கண்முன்னே காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு வாலிபர் சாவு


நண்பர்கள் கண்முன்னே காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு வாலிபர் சாவு
x
தினத்தந்தி 2 May 2021 3:11 AM IST (Updated: 2 May 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

நண்பர்கள் கண்முன்னே காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு வாலிபர் இறந்தார்.

மொடக்குறிச்சி
நண்பர்கள் கண்முன்னே காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு வாலிபர் இறந்தார். 
கட்டிட தொழிலாளி
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள காடையாம்பட்டி இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவருடைய மகன் மதன்குமார் (வயது 20). கட்டிட தொழிலாளி. இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளி எஸ்.பி.எஸ் பழனிசாமி நகரில் வசிக்கும் தன்னுடைய நண்பர் அஜய்குமார் என்பவரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார்.
பின்னர் சின்னியம்பாளையம் அடுத்த வல்லாள ஈஸ்வரன் கோவில் அருகே செல்லும் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக மதன்குமார், அஜய்குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த யோகேஷ், சுகனேஷ் ஆகியோருடன் சென்றார்.
அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மதன்குமார் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
பெரும் சோகம்
இதைப்பார்த்த உடன் சென்ற நண்பர்கள் மதன்குமாரை காப்பாற்ற முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து உடனே மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆற்றில் இறங்கி மதன்குமாரை தேடினார்கள். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் அவருடைய உடல் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
நண்பர்கள் கண்முன்னே வாலிபர் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அவருடைய உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story