வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி


வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 1 May 2021 11:44 PM GMT (Updated: 1 May 2021 11:44 PM GMT)

ஊட்டியில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஊட்டி

ஊட்டியில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வாக்கு எண்ணும் பணி

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்பட 3 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊட்டியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடக்கிறது. இந்த பணிக்கு வாக்கு எண்ணும் உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள் என தொகுதி வாரியாக மொத்தம் 159 அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனர். 

மேலும் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் போடப்படுகிறது. ஒரு மேஜையில் 3 பேர் பணியில் இருப்பார்கள். இதற்கான பணி ஒதுக்கீடு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு நடைபெறுகிறது. இதில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் எந்த மேஜையில் பணிபுரிய வேண்டும் என்பது தெரியவரும்.

வாக்கு எண்ணுவதை கண்காணிக்க வாக்கு எண்ணும் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பயிற்சி முகாம்

இந்த நிலையில் நேற்று ஊட்டி சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்களுக்கு ஊட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளின் சீல் அகற்றப்பட்ட பின்னர், அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மேஜைக்கு எடுத்து வர வேண்டும். மேஜையில் எந்திரங்களின் எண் கொடுக்கப்பட்டு இருக்கும். எந்திரங்களில் அதே எண் உள்ளதா? என்று சரிபார்க்க வேண்டும். 

அதன் பின்னர் எந்திரத்தில் சீலை அகற்றி வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும். எதிரே கம்பி வலையை அடுத்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

அடையாள அட்டை

ஒவ்வொரு சுற்று எண்ணிக்கையின்போதும் வாக்கு எண்ணும் அலுவலர்கள் 17-சி என்ற படிவத்தில் கட்சி வாரியாக பதிவான வாக்குகளை குறிக்க வேண்டும். அந்த படிவத்தில் முகவர்களிடம் கையெழுத்து பெற்று தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 

அதன் பின்னர் அவர் சுற்று வாரியாக வாக்கு எண்ணிக்கை விவரங்களை அறிவிப்பார். 14 மேஜைகளிம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் அடுத்த சுற்றை தொடங்க வேண்டும்.

தபால் வாக்குகளை எண்ண 4 மேஜைகளில், தலா 500 தபால் வாக்குகள் கொட்டப்படும். இதனை ஒவ்வொன்றாக முகவர்களிடம் காண்பித்து எண்ண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தொடர்ந்து வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பணி ஆணை, அடையாள அட்டை வழங்கப்பட்டது.


Next Story