மாவட்ட செய்திகள்

மாங்காடு அருகே சொத்துக்காக கணவரை கொன்று உடலை கல்குவாரியில் வீசிய மனைவி + "||" + Wife who killed husband for property near Mankadu and threw body in quarry

மாங்காடு அருகே சொத்துக்காக கணவரை கொன்று உடலை கல்குவாரியில் வீசிய மனைவி

மாங்காடு அருகே சொத்துக்காக கணவரை கொன்று உடலை கல்குவாரியில் வீசிய மனைவி
மாங்காடு அருகே சொத்துக்காக கணவரை கொன்று உடலை கல்குவாரியில் வீசிய மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் கோவூர் மேற்கு மாட வீதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 37). சொந்தமாக லாரிகள் வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். மேலும் கோவூர் ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினராக இருந்து வந்தார். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் தனது மகன், மருமகள், பேரப்பிள்ளைகளை காணவில்லை என பாஸ்கரின் தாய் மோகனாம்பாள் மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாங்காடு இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரது வீடு வெளிப்புறம் பூட்டி இருந்ததால் சந்தேகம் அடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்து துர்நாற்றம் வீசியது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது நள்ளிரவில் உஷா ஒரு மூட்டையை எடுத்து சென்று அருகில் உள்ள குளத்தில் வீசுவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த மூட்டையை எடுத்து பார்த்தபோது அதில் ரத்தக்கறை படிந்த தலையணை, பெட்சீட் இருப்பது தெரியவந்தது. மேலும் பாஸ்கரை ரத்த காயங்களுடன் காரில் ஏற்றி செல்வதும் பதிவாகி இருந்தது.

இந்தநிலையில் நேற்று காலை சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் ஆண் பிணம் மிதப்பதாக வந்த தகவலையடுத்து மாங்காடு போலீசார், பூந்தமல்லி தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் அந்த உடலை மீட்டனர். அந்த நபரின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததையடுத்து காணாமல் போன பாஸ்கரின் தாயை அழைத்து காண்பித்தபோது தனது மகன் என தெரிவித்தார். இதையடுத்து பாஸ்கரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்கருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன என்பதும், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரிய வந்தது. மேலும் அந்த சொத்தை அபகரிக்கும் நோக்கில் உஷா மற்றும் அவரது அண்ணன் பாக்கியராஜ் ஆகியோர் சேர்ந்து பாஸ்கரை வீட்டுக்குள்ளேயே அடித்துக்கொலை செய்து கை, கால்களை கட்டி கல்குவாரியில் வீசி இருப்பதும் கொலையை மறைக்க ரத்தக்கறை படிந்த பெட்ஷீட் மற்றும் தலையணைகளை எடுத்து சென்று குட்டையில் வீசி விட்டு அறை முழுவதும் ரூம் ஸ்ப்ரே அடித்து விட்டு குழந்தைகளுடன் தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக உள்ள பாஸ்கரின் மனைவி அவரது அண்ணன் பாக்கியராஜ் உள்ளிட்ட சிலரை மாங்காடு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற உஷா வீட்டில் இருந்த சொத்து ஆவணங்கள், லாரி சாவிகள், கார் சாவி, நகைகளை எடுத்து சென்றிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கு சொத்து பிரச்சினை காரணமா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் மாங்காடு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.