மேடவாக்கத்தில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர் உள்பட 2 பேர் கைது
மேடவாக்கத்தில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ‘ரெம்டெசிவிர்’ என்ற மருந்தையே டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனால் இந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் அந்த மருந்தை கொள்முதல் செய்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் சிலர் இந்த மருந்தை வாங்கி கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக சென்னையில் மட்டும் இதுவரை டாக்டர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் சென்னையை அடுத்த வேங்கைவாசல் சிவசண்முகம் தெருவைச் சேர்ந்த டாக்டர் தீபன் (வயது 28) என்பவர் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை கள்ளச் சந்தையில் ரூ.22 ஆயிரத்துக்கு விற்பதாக காஞ்சீபுரம் மாவட்ட சிவில் சப்ளை சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் விநாயகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து டாக்டர் தீபனை தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர், தனக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்து தேவைப்படுவதாகவும், தான் மேடவாக்கத்தில் இருப்பதாகவும், அங்கு வந்து மருந்தை தருமாறும் கூறினார்.
அதை நம்பிய டாக்டர் தீபன், தனது உதவியாளரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த நவீன் (26) என்பவருடன் 6 ‘ரெம்டெசிவிர்’ மருந்துகளை எடுத்து வந்தார். அங்கு மறைந்திருந்த போலீசார், டாக்டர் உள்பட 2 பேரையும் மடக்கிப்்பிடித்து பள்ளிக்கரணை போலீசில் ஒப்படைத்தனர்.
பள்ளிக்கரணை போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் டாக்டர் தீபன், சேலையூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருவதும், நவீன் ஒரு மருந்து கடையில் வேலை செய்வதும் தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் கைது செய்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story