கொரோனா நோயாளிகள், குடும்பத்தினர் வெளியே சுற்றினால் ரூ.2 ஆயிரம் அபராதம் - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை


கொரோனா நோயாளிகள், குடும்பத்தினர் வெளியே சுற்றினால் ரூ.2 ஆயிரம் அபராதம் - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 May 2021 7:01 PM IST (Updated: 2 May 2021 7:01 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெளியே சுற்றினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

சென்னை பல்லவன் சாலையில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களுக்கான முதற்கட்ட உடற்பரிசோதனை மையத்தினை சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலரும், வணிக வரித்துறை முதன்மை செயலாளருமான எம்.ஏ.சித்திக் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலர் சித்திக், நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை நகரத்தில் பல இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதுவரை 15 முதற்கட்ட பரிசோதனை மையங்கள் உள்ளன. மேலும் 6 பரிசோதனை மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று உள்ளவர்கள் முதலில் பரிசோதனை மையத்துக்கு சென்று பரிசோதித்து கொள்ள வேண்டும். பின்பு தேவை இருந்தால் ஆஸ்பத்திரியில் அனுமதித்துக்கொள்ளலாம்

அந்தவகையில் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கும், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கும் பொதுவாக பல்லவன் சாலையில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில் முதற்கட்ட உடற்பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே பாதிப்பு அதிகம் இல்லாத கொரோனா நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல், இந்த மையத்துக்கு நேரடியாக வந்து பரிசோதித்துகொள்ளலாம்.

இந்த மையத்தில் நாள் ஒன்றுக்கு 600 நோயாளிகளை பரிசோதிக்கும் வசதி உள்ளது. தொற்று உறுதியானால், பொதுமக்கள் உடனடியாக பரிசோதனை மையத்துக்கு தான் வரவேண்டும். சென்னையில் ஏற்கனவே 280 ஆம்புலன்ஸ் சேவைகள் இருந்தது. இந்த சேவை தற்போது 350 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ஆம்புலன்ஸ் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான கோ.பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியில் இன்றைய தேதியில் 619 முன்கள பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 90 சதவீதம் முன்கள பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். கொரோனா 2-வது அலையில் பெருநகர சென்னை மாநகராட்சி முன்கள பணியாளர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் போலீசார் 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபரோ அல்லது அவரது குடும்பத்தினரோ வெளியே சுற்றினால் முதல் முறை 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் வெளியே சுற்றினால் அவர்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள். இது இன்று (அதாவது நேற்று) முதல் நடைமுறைக்கு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story