பெரியகுளம் தொகுதியில் பேனா இல்லாததால் தாமதமாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை


பெரியகுளம் தொகுதியில் பேனா இல்லாததால் தாமதமாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 2 May 2021 2:03 PM GMT (Updated: 2 May 2021 2:03 PM GMT)

பெரியகுளம் தொகுதியில் பேனா இல்லாததால் வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கியது.


தேனி:
தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது. தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8.30 மணிக்கும் தொடங்குவதாக இருந்தது. ஆனால், பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த தொகுதியில் வேட்பாளர்களின் முகவர்கள் பலரிடம் குறிப்பெடுக்க பேனா இல்லை. நுழைவு வாயிலில் நடந்த சோதனையின் போது, பேனாவில் கேமரா இருப்பதாக போலீசார் பேனாக்களை பறிமுதல் செய்துவிட்டதாக முகவர்கள் கூறினர். 
இதனால் முகவர்களுக்கு தேர்தல் பணிக்கு வந்திருந்த அலுவலர்கள் தங்களிடம் இருந்த பேனாவை வழங்கினர். போலீசார் சிலரும் தங்களிடம் இருந்த பேனாவை கொடுத்தனர். இதையடுத்து சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதே காரணத்துக்காக தபால் வாக்குகளை எண்ணுவதற்கும் 30 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. அதுபோல் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்க இருந்த நிலையில், தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். சுமார் 20 நிமிடங்களாக காத்திருந்தும் தேர்தல் பார்வையாளர் அங்கு வரவில்லை. முகவர்கள் வாக்குவாதம் செய்யத் தொடங்கியதால் 20 நிமிடங்கள் தாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

Next Story