பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு


பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 2 May 2021 11:58 PM IST (Updated: 3 May 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

9-ம் வகுப்பு மாணவன்

கோவையை அடுத்த துடியலூர் சேரன்நகரை சேர்ந்தவர் அசோக் (வயது 42), ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். இவருடைய மகன் பிரபாகரன் (15). இவன் துடியலூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரபாகரன் தனது உறவினர் கண்ணன் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லித்துறை அடுத்த விளாமரத்தூரில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். 

பின்னர் இவர்கள் 2 பேரும் குண்டுக்கல்துறை அருகே பவானி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பிரபாகரன் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.

ஆற்றில் மூழ்கினான்

இதில் அந்த மாணவன் ஆற்றில் மூழ்கி தத்தளித்தான். உடனடியாக அவனை கண்ணன் காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் அவன் ஆற்றில் மூழ்கிவிட்டான். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பரிசல்காரர்கள் உதவியுடன் ஆற்றில் இறங்கி பள்ளி மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரம் ஆனாதாலும், அந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் மாணவனை தேடும் பணியை கைவிட்டனர்.

பிணமாக மீட்பு

இதனைத்தொடர்ந்து நேற்று காலை மீண்டும் தீயணைப்பு வீரர்கள் பள்ளி மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காலை 8.30 மணியளில் பிரபாகரன் இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டான். இதையடுத்து மாணவனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து விளாமரத்தூர் பகுதியில் உள்ள குண்டுக்கல்துறை பவானி ஆற்றில் குளிக்க வருவாய் துறை சார்பில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. 

Next Story