பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன


பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 3 May 2021 12:20 AM IST (Updated: 3 May 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

முழுஊரடங்கையையொட்டி பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. சாலைகள் வெறிச்சோடின.

பொள்ளாச்சி

முழுஊரடங்கையையொட்டி பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. சாலைகள் வெறிச்சோடின. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

முழுஊரடங்கு

தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இரவுநேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி பொள்ளாச்சி பகுதிகளில் நேற்று முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகள், இறைச்சி கடைகள், தியேட்டர்கள், காய்கறி மார்க்கெட், சந்தைகள், மதுக்கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.

மேலும் பஸ், கார், லாரி, ஆட்டோக்கள், இருசக்கர வாகனம் உள்பட அனைத்து வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பாலக்காடு ரோடு, கோவை ரோடு, உடுமலை ரோடு மற்றும் மீன்கரை ரோடு, கடை வீதி, சத்திரம் வீதி, நியூஸ்கீம் ரோடு உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

போலீசார் கண்காணிப்பு

இதற்கிடையில் பொள்ளாச்சியில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தேவையில்லாமல் சாலைகளில் சுற்றி திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். அத்தியாவசிய தேவைக்கு சென்றவர்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.

போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் ரோந்து சென்று கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்தார். அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், விளை பொருட்களை கொண்டு செல்லும், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருத்துவம் சார்ந்த பணிகள் மட்டும் வழக்கம்போல் செயல்பட்டன.

பொள்ளாச்சி பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் காந்தி மார்க்கெட், திரு.வி.க. மார்க்கெட், தேர்நிலை திடல் ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட்களில் உள்ள கடைகள் மூடப்பட்டு இருந்தன. 

பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்த ஆதரவற்றோருக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை மற்றும் தன்னார்வலர்கள் உணவு வழங்கினார்கள்.

இதேபோன்று ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு பகுதிகளில் முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆனைமலையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வால்பாறை

வால்பாறையில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு வால்பாறை நகர் பகுதி மட்டுமல்லாமல் அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. 

இதனால் வால்பாறை-பொள்ளாச்சி சாலை ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் நேற்று சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது. ஆனால் வெற்றியை தொண்டர்கள் கொண்டாட முடியவில்லை.

முழு ஊரடங்கையொட்டி வால்பாறையில் முக்கிய சாலைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் வால்பாறை போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Next Story