வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள் மூடப்பட்டன


வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 2 May 2021 6:55 PM GMT (Updated: 2 May 2021 6:55 PM GMT)

வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள் மூடப்பட்டன

கோவை

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக கோவையில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மூடப்பட்டு இருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

முழு ஊரடங்கு உத்தரவு

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. 

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை களில் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி நேற்று முழு ஊரடங்கு காரணமாக கோவையில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகள், பேக்கரிகள், துணிக்கடைகள், நகைக்கடைகள், வணிகவளாகங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தன.
சாலைகள் வெறிச்சோடின

இதன்காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒப்பணக்கார வீதி, டி.கே.வீதி, ராஜவீதி, பெரியகடை வீதி, டவுன்ஹால், 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு ஆகியவற்றில் உள்ள கடைகள் அனைத்தும் பூட்டிக் கிடந்தது. மேலும் பூ மார்க்கெட் உள்பட மார்க்கெட்டுகள் பூட்டிக் கிடந்தன. இதனால் வாகன போக்குவரத்து இன்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பொதுமக்கள் பலரும் வீடுகளிலும் முடங்கி இருந்தனர். இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக பஸ்கள் எதுவும் இயக்கப்பட வில்லை. 

இதனால் காந்திபுரம் டவுன் பஸ்நிலையம், மத்திய பஸ் நிலையம், உக்கடம், சிங்காநல்லூர் ஆகிய பஸ் நிலையங்கள் ஆட்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

பால் வினியோகம்

காலையில் சில மணி நேரம் மட்டுமே பால் வினியோகம் நடைபெற்றது. மருந்துக்கடைகள் 24 மணி நேரமும் திறந்து இருந்தன. பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு இருந்தன. 

ஒரு சில உணவகங்களில் பார்சல் கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் வினியோகிக்கப்பட்டன. மேலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள், கோவை மேட்டுப்பாளையம் ரோடு, உக்கடம்-ஆத்துப்பாலம் ரோடு மேம்பால பணிகள் நிறுத்தப்பட்டன.

கோவையில் உள்ள சிறு குறு தொழிற்சாலைகள், பவுண்டரிகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு காரணமாக கோவை காந்திபுரம் 2 அடுக்கு மேம்பாலம், அவினாசி ரோடு மேம்பாலம் ஆகியவை இரும்பு தடுப்புகள் கொண்டு மூடப்பட்டு இருந்தது.

மார்க்கெட்டுகள் மூடல்

முழு ஊரடங்கால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை அவினாசி ரோடு, திருச்சி ரோடு, சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட அனைத்து சாலைகளும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

சிங்காநல்லூர் உழவர் சந்தை, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை, டி.கே. மார்க்கெட், எம்.ஜி.ஆர். மார்க்கெட், அண்ணா மார்க்கெட் உள்ளிட்டவை மூடப்பட்டு இருந்தன.

போலீஸ் பாதுகாப்பு

ஊரடங்கை முன்னிட்டு முக்கிய இடங்கள் மற்றும் சந்திப்புகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது, காலை நேரத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வாகனங்களில் சென்ற வேட்பாளர்களின் முகவர்களுக்கு மட்டும் போலீசார் அவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்து அனுமதி அளித்தனர்.

சாலைகளில் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த இளைஞர்களை போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். உக்கடம் பகுதியில் சி.ஆர்.பி.எப். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியாளர்கள்

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று காலை வழக்கம் போல் குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. ஒருசில திருமணங்கள் வீடுகளில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.

வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்ட ரோடுகளில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். ஒரு சில இடங்களில் சிறுவர்கள் சைக்கிளில் ஜாலியாக சுற்றி வந்தனர். வீடுகளில் இருந்த முதியவர்கள், பெண்கள் தாயம், செஸ் விளையாடி பொழுதை போக்கினர்.


Next Story