கொரோனா பரவல் தடுப்பு ஏற்பாடுகளுடன் நடந்த வாக்கு எண்ணிக்கை
கொரோனா பரவல் தடுப்பு ஏற்பாடுகளுடன் நடந்த வாக்கு எண்ணிக்கை
கோவை
கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையுடன் நடந்தது.
10 சட்டமன்ற தொகுதிகள்
கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு, வடக்கு, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, சூலூர், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்றது.
இதற்காக 10 தொகுதிகளிலும் மொத்தம் 4,427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. கொரோனா தொற்று காரணமாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை மையம்
கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளிலும் 21 லட்சத்து 5 ஆயிரத்து 673 பேர் வாக்களித்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் 68.32 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரிக்கு (ஜி.சி.டி.) கொண்டு செல்லப்பட்டு கட்டுக்காப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
வாக்கு எண்ணும் பணி
இந்த நிலையில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலையில் தொடங்கியது. இதற்காக 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், கொரோனா இல்லை (நெகட்டிவ்) என சான்றிதழ் கொண்டு வந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லும் முன்பு அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. கைகளில் கிருமி நாசினி தெளிக் கப்பட்டது. அத்துடன் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
பாதுகாப்பு
இதுதவிர ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் கட்சிகளின் முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட வில்லை.
மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் மாநகர போலீஸ் கமிஷர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் சட்டம் - ஒழுங்கு துணை கமிஷனர் ஸ்டாலின் முன்னிலையில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், துணை ராணுவத்தினரும் துப்பாக்கி ஏந்தியவாறு பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.
கவுண்டம்பாளையம் பெரிய தொகுதி என்பதால் வாக்கு எண்ணுவதற்காக 20 டேபிள்களும், மற்ற 9 தொகுதிகளுக்கு தலா 14 டேபிள்கள் என மொத்தம் 146 டேபிள்கள் போடப்பட்டு இருந்தன.
கண்காணிப்பு கேமராக்கள்
ஒவ்வொரு டேபிள்களுக்கும் மேலே கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த தபால் ஓட்டுகள் கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டன.
அதைத்தொடர்ந்து ஸ்ட்ராங் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுத்து வரப்பட்டது. அதைத்தொடர்ந்து முகவர்கள் முன்னிலையில் டேபிள்களில் வைக்கப் பட்டு, சீல்கள் உடைக்கப்பட்டு விறுவிறுப்பாக வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.
ஒரு டேபிளுக்கு 30 சுற்றுவரை வாக்குகள் எண்ணப்பட்டது. கவுண்டம் பாளையம் தொகுதி பெரிய தொகுதி என்பதால் அங்கு 20 டேபிள்களில் 30 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்குவாதம்
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் காலை 8 மணிக்கு பிறகு வந்த தபால் ஓட்டுகளை ஏற்க கூடாது எனவும், தபால் ஓட்டுகளில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது எனவும் வாக்கு எண்ணும் அதிகாரிகளுடன் முகவர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.மேலும் வாக்கு எண்ணிக்கையை நடத்த கூடாது எனவும் கோஷமிட் டனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் மாவட்ட கலெக்டர் நாகராஜன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனால் 30 நிமிடம் தாமதமாக தபால் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது
அடையாள அட்டை
வாக்கு எண்ணும் மையத்துக்குள் எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
முகவர்கள் வாக்கு எண்ணுவதை பார்வையிடுவதற்காக வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே இரும்புக்கம்பி வைத்து கட்டப்பட்டு இருந்தன. அதன் வெளியே முகவர்கள் நின்று கொண்டு வாக்கு எண்ணும் பணிகளை பார்வையிட்டனர்.
ஓட்டு எண்ணும் அனைவரும் அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை கழுத்தில் அணிந்திருந்தனர். ஒவ்வொரு சுற்றுக்கள் எண்ணிக்கை முடிந்ததும் வாக்கு எண்ணும் பகுதியில் கொரோனா தடுப்பு பணி காரணமாக கிருமி நாசினி கொண்டு சுகாதார பணியாளர்கள் தெளித்தனர்.
ஒரு சில முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு முழு உடல் கவச உடை அணிந்து வந்திருந்தனர். சிலர் முழு முகத்தையும் மூடும் வகையில் முகசீல்டு அணிந்து வந்து இருந்தனர்.
Related Tags :
Next Story