திருச்சியில் பரபரப்பு போலீஸ்காரரை தாக்கி, செல்போன் பறிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது


திருச்சியில் பரபரப்பு போலீஸ்காரரை தாக்கி, செல்போன் பறிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது
x

திருச்சியில் போலீஸ்காரரை தாக்கி செல்போன் பறிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி, 
திருச்சியில் போலீஸ்காரரை தாக்கி செல்போன் பறிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சைபர் கிரைம் போலீஸ்காரர்
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் ராமகிருஷ்ணன். இவர் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் பாலக்கரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
டி.வி.எஸ். டோல்கேட் பகுதியிலிருந்து முதலியார் சத்திரம் ரெயில்வே குட்ஷெட் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென அவரை மறித்தனர்.
ெஹல்மெட்டால் தாக்கினர்
அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் ராமகிருஷ்ணனை ஹெல்மெட்டால் தாக்கினர். அவர், சாதாரண உடையில் இருந்ததால் அவர்களுக்கு ராமகிருஷ்ணன் போலீஸ்காரர் என்று தெரியவில்லை. பின்னர் இருவரும் அவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதை பார்த்த எதிர்புறம் சென்ற வாகன ஓட்டிகள் விரைந்து சென்று, போலீஸ்காரரை தாக்கிவிட்டு, தப்பி செல்ல முயன்ற 2 பேரையும் மடக்கி பிடித்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
2 வாலிபர்கள் கைது
போலீஸ் விசாரணையில் அவர்கள், திருச்சி குறிஞ்சிநகரை சேர்ந்த நரேஷ் பாண்டியன் (வயது 22), பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்த மனோரஞ்சன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தார். 
பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி மாநகரில் போலீஸ்காரரையே தாக்கி செல்போன் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் பொதுமக்களிடையே அச்சத்தை உண்டாக்கி உள்ளது.

Next Story