பேரிடர் காலத்தில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை


பேரிடர் காலத்தில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 May 2021 2:01 AM IST (Updated: 9 May 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

பேரிடர் காலத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமாக இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு
பேரிடர் காலத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமாக இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ரேஷன் பொருட்கள்
தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை முதல் 24-ந் தேதி அதிகாலை வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த காலத்தில் பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக இருப்பது உணவு. ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி வினியோகம் செய்ய அரசு உத்தரவிட்டு உள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை வழங்கப்படுகிறது. அரிசி மற்றும் கோதுமை இலவசமாக அட்டைகளுக்கு உரிய அளவு வழங்கப்படுகிறது. பிற பொருட்களும் உரிய அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
தரமில்லாத அரிசி
இது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் விஷயமாகும். குறிப்பாக கூலி வேலைக்கு செல்பவர்கள், சிறு வேலைகளுக்கு செல்பவர்கள் இந்த வேலை இழப்பு காலத்தில் குடும்பத்தை ஓட்ட ரேஷன் அரிசி மிகவும் உதவிகரமாக இருக்கும். ஆனால் தற்போது ரேஷனில் வழங்கும் அரிசி பெரும்பாலும் தரமாக இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது:-
ரேஷன் கடையில் வாங்கிய அரிசியில் ஒரு கைப்பிடி அளவுக்கு அரிசி எடுத்தால் அதில் குறைந்தது 10 நெல் மற்றும் குருணை உள்ளது. அரிசியும் பழுப்பு நிறத்தில் உள்ளது. ரேஷன் கடைகளில் ஒரு சில மூட்டைகளில் நல்ல அரிசி உள்ளது. அந்த அரிசி கிடைப்பது அதிர்ஷ்டம் என்ற நிலைதான் இருக்கிறது. அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான தரமான அரிசி வழங்க வேண்டும். இதற்கு அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊரடங்கு காலத்தில் கடைகள் எதுவும் திறக்காதநிலையில், ரேஷன் அரிசிதான் ஒரே உணவு ஆதாரமாக உள்ளது. அதுவும் துர்நாற்றம் வீசுவதுடன், கல், நெல், குருணை என்று இருந்தால் எப்படி சாப்பிட முடியும். எனவே தரமான அரிசி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story