2 வாரம் முழு ஊரடங்கு எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்த மதுப்பிரியர்கள்


2 வாரம் முழு ஊரடங்கு எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்த மதுப்பிரியர்கள்
x
தினத்தந்தி 9 May 2021 4:08 AM IST (Updated: 9 May 2021 4:10 AM IST)
t-max-icont-min-icon

2 வாரம் முழு ஊரடங்கு எதிரொலியால் டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று மதுப்பிரியர்கள் படையெடுத்தனர். அவர்கள் கூடுதலாக மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

சேலம்,

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா வைரசின் தாக்கம் குறையவில்லை. இதனால் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கை பிறப்பித்து அரசு நேற்று உத்தரவிட்டது. 2 வார கால இந்த முழு ஊரடங்கின் போது டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மட்டுமே செயல்படும் என்பதால் சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டும், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் கட்டமும் போடப்பட்டிருந்தது.

கூடுதல் மதுபாட்டில்கள்

குறிப்பாக மாநகரில் பல இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு காலை முதலே மதுப்பிரியர்கள் படையெடுத்தனர். கூடுதலாக மதுபாட்டில்களை வாங்கி  செல்வதற்காக பலர் பைகள், சாக்குகள் உள்ளிட்டவைகளை எடுத்து வந்தனர். மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்றாலும் யாரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டுகொள்ளவில்லை.

சில கடைகளில் மதுப்பிரியர்கள் வழக்கம்போல் முண்டியடித்து கொண்டு தங்களுக்கு விருப்பமான மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். ஊரடங்கு எதிரொலியாக இருப்பு வைத்து குடிப்பதற்காக பலர் கூடுதலாக மது பாட்டில்களை வாங்கி சென்றனர். புதிய கட்டுப்பாடுகளால் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானம் விற்பனை மந்தமாகவே இருந்தது. ஆனால் நேற்று மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை அமோகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story