மாமல்லபுரம் அயல்நாட்டு மதுக்கடையில் மதுபிரியர்கள் குவிந்தனர்


மாமல்லபுரம் அயல்நாட்டு மதுக்கடையில் மதுபிரியர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 8 May 2021 10:38 PM GMT (Updated: 8 May 2021 10:38 PM GMT)

மாமல்லபுரம் அயல்நாட்டு மதுக்கடையில் மதுபிரியர்கள் குவிந்தனர்.

மாமல்லபுரம், 

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் படிப்படியாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தமிழக அரசு நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்த அறிவித்துள்ளது.

இந்த ஊரடங்கு நாட்களில் மதுக்கடைகளும் மூடப்பட உள்ளன. மதுக்கடைகள் மூடி விட்டால் மீண்டும் மது கிடைக்காமல் போய் விடுமோ? பிறகு எப்போது கடை திறப்பார்களோ என அச்சமடைந்து இருப்பு வைத்து கொள்வதற்காக மது வாங்க பல்வேறு இடங்களில் இருந்து மதுபிரியர்கள் திரண்டு வந்திருந்தனர்.

மது பிரியர்களின் கூட்டத்தால் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அயல்நாட்டு மதுக்கடையில் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது. மது வாங்க வந்தவர்களை டாஸ்மாக் பணியாளர்கள் வரிசையில் நிற்க வைத்து அவர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கினர். முக கவசம் அணிந்தவர்கள் மட்டும் 5, 5 பேராக கடைக்குள் சென்று மது வாங்க அனுமதித்தனர்.

மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் வந்த போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் வரிசையில் சென்று மது வாங்கி செல்ல மதுபிரியர்களிடம் அறிவுறுத்தினர்.

மதுபிரியர்கள் பலர் கொளுத்தும் வெயிலில் சில மணி நேரம் காத்திருந்து வரிசையில் சென்று தங்களுக்கு பிடித்த பீர், பிராந்தி, ரம், ஓட்கா, ஒயின் போன்ற விலை உயர்ந்த மதுபாட்டில்களை வாங்கி சென்றதை காண முடிந்தது.

மது பிரியர்கள் வந்த வாகனத்தால் மாமல்லபுரம் இ.சிஆர். சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் கார்கள் அணி வகுத்து நின்றன.

காஞ்சீபுரம் ராஜாஜி காய்கறி சந்தை அருகே உள்ள மதுக்கடை, மேட்டுத்தெரு, அரசு ஆஸ்பத்திரி சாலை போன்ற இடங்களில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கிச்சென்றனர்.

Next Story