நாளை முதல் முழு ஊரடங்கு : கடைகளில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்
தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதை முன்னிட்டு கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அலைமோதினர்.
நாமக்கல்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. காய்கறி, மளிகை கடைகள் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாளை (திங்கட்கிழமை) முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவித்து உள்ளது.
இந்த முழு ஊரடங்கு நேரத்திலும் மதியம் 12 மணி வரை காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகள் திறந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் நேற்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் சலூன் கடைகளும் 2 நாட்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் சலூன் கடைகளிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. செல்போன் கடை உள்ளிட்ட கடைகளிலும் வழக்கத்தை காட்டிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
டாஸ்மாக் கடைகள்
டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரையில் முழு ஊரடங்கின் போது மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளிலும் வழக்கத்தை காட்டிலும் மதுபிரியர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததை காணமுடிந்தது. மேலும் மதுபிரியர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட மதுபாட்டில்களை அதிகளவில் வாங்கி சென்றதையும் பார்க்க முடிந்தது.
=======
Related Tags :
Next Story