தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்கள் கண்காணிப்பு
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களை கண்காணிக்க கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு புகார் காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களை கண்காணிக்க அதிகாரிகளை நியமித்து கலெக்டர் செந்தில்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆக்சிஜன்
கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவை அதிகரித்து உள்ளது. தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனம் மற்றும் ஓட்டப்பிடாரம் தாலுகா மேலஅரசடியில் உள்ள ஒரு தனியார் ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனம் மூலம் மருத்துவ தேவைகளுக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான நெல்லை, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்து உள்ளன.
கண்காணிப்பு
இதைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மேற்கண்ட 2 தனியார் நிறுவனங்களில் இருந்து ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்வதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, இந்த 2 தனியார் நிறுவனங்களில் இருந்து ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்வதை கண்காணிக்க மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு உதவியாக தூத்துக்குடி தாசில்தார் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் 2 தனியார் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வேறு யாருக்கும் வழங்கப்படாமல், ஆஸ்பத்திரிகளுக்கு மட்டும் வழங்குவதற்கும், உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story