புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலைக்கல்லூரியில் 90 படுக்கைகளுடன் தற்காலிக கொரோனா மருத்துவ மையம் - நேற்று முதல் செயல்பட தொடங்கியது
புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலைக்கல்லூரியில் 90 படுக்கைகளுடன் தற்காலிக கொரோனா மருத்துவ மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இது நேற்று முதல் செயல்பட தொடங்கியது.
கொள்ளிடம்,
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து கொள்ளிடம் சோதனைச்சாவடி வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வாகனங்களிலும், நடந்தும் வந்தபடி உள்ளனர்.
வெளியூரில் இருந்து வரும் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற நிலையில் கொள்ளிடம் சோதனைச்சாவடியில் 10-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கொள்ளிடம் பகுதியில் மருத்துவ பரிசோதனையில் ஈடுபடுத்தப்படுபவர்கள் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் சீர்காழி அல்லது மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெறுகிறார்கள்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருப்பதால் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலைக் கல்லூரியில் மருத்துவத்துறை சார்பில் 15 அறைகள் ஒதுக்கப்பட்டு 90 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது தற்காலிக மருத்துவ மையமாக செயல்பட்டு வருகிறது.
இங்கு அரசு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். வெளியூர்களில் இருந்து கொள்ளிடம் சோதனை சாவடி வழியாக வருபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் இயங்கி வரும் தற்காலிக மருத்துவ மையத்தில் தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படும். இங்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த தகவலை வட்டார சுகாதாரத்துறை அலுவலர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story