முழு ஊரடங்கு: சீசன் மீன்பிடிப்புக்கு வந்த மீனவர்கள் திரும்பிச்சென்றனர்


முழு ஊரடங்கு: சீசன் மீன்பிடிப்புக்கு வந்த மீனவர்கள் திரும்பிச்சென்றனர்
x
தினத்தந்தி 9 May 2021 6:54 PM IST (Updated: 9 May 2021 6:54 PM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு அமலுக்கு வருவதன் எதிரொலியாக மண்டபத்தில் இருந்து படகுடன் சொந்த ஊருக்கு கன்னியாகுமரி மீனவர்கள் திரும்பிச்சென்றனர்.

பனைக்குளம்,

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக நாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் ஆண்டுதோறும் சீசன் மீன்பிடிப்புக்காக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பைபர் படகுடன் ஏராளமான மீனவ குடும்பங்கள் மண்டபம் வந்து குறிப்பிட்ட சில மாதங்கள் தங்கி இருந்து மீன் பிடிப்பது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தின் முட்டம் சின்னமுட்டம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் சுமார் 30-க்கும் மேற்பட்ட படகுகளுடன் ஏராளமான மீனவர்கள் மண்டபம் வந்து தங்கி இருந்தனர். முழு ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருவதன் எதிரொலியாக மண்டபத்தில் சீசனுக்காக வந்து தங்கி இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று முதல் படகுடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கினர். படகுகளை சிறிய கனரக வாகனத்தில் ஏற்றி அந்த வாகனத்திலேயே மீனவர்கள் அமர்ந்து மண்டபத்தில் இருந்து நேற்று புறப்பட்டு சென்றனர்.

இதுபற்றி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர் ஜோசப் கூறியதாவது:- ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையிலும் சீசனுக்காக மண்டபம் கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க படகுடன் கன்னியாகுமரியில் இருந்து வருவது வழக்கம். அது போல் இந்த ஆண்டும் கடந்த மார்ச் மாதம் மண்டபம் பகுதிக்கு படகுடன் வந்தோம்.

இந்த ஆண்டு மீன்கள் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை. அதுபோல் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மீன்களுக்கும் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. முழு ஊரடங்கு காரணமாக படகுடன் சொந்த ஊருக்கே திரும்பி செல்கிறோம். இந்த முறை சீசனுக்காக வந்தும் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் நல்ல விலையும் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story