2-வது நாளாக பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்
கோவையில் 2-வது நாளாக கடைவீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மீன், இறைச்சி விற்பனை அதிகரித்தது.
கோவை
கோவையில் 2-வது நாளாக கடைவீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மீன், இறைச்சி விற்பனை அதிகரித்தது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், டீக்கடைகள் மதியம் 12 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இருந்தபோதிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கோவையில் உள்ள கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.
இதனால் கோவையில் உள்ள பெரியகடை வீதி, ரங்கேகவுடர் வீதி, ஒப்பணக்கார வீதி, டி.கே.மார்க்கெட், உழவர்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
அவர்கள் தங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு வகைகள் உள்ளிட்ட மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி சென்றனர்.
இறைச்சி விற்பனை அதிகரிப்பு
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அன்றைய தினம் மீன், இறைச்சி கடைகள் திறக்கப்படவில்லை. நேற்று இறைச்சி கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இதனால் உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.
அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடை வெளியை பின்பற்றி தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர். இதேபோல் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது. இதனால் இறைச்சி விற்பனை அதிகரித்தது.
போக்குவரத்து நெரிசல்
இறைச்சி மற்றும் மளிகை பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்ததால் டவுன்ஹால், உக்கடம், டி.கே.மார்க்கெட், ஆர்.எஸ். புரம் மற்றும் சிங்காநல்லூர் உழவர் சந்தை பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சரி செய்தனர்.
மேலும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றக்கோரியும் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து கொண்டு இருந்தனர்.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற கடைகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்தனர்.
மேலும் மக்கள் கூடும் இடங்களில் வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story