போலீசார் தாக்கியதாக கல்லூரி மாணவி தர்ணா


போலீசார் தாக்கியதாக கல்லூரி மாணவி தர்ணா
x
தினத்தந்தி 9 May 2021 8:49 PM IST (Updated: 9 May 2021 9:01 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டையில் போலீசார் தாக்கியதை கண்டித்து கல்லூரி மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள கொக்குபட்டியை சேர்ந்த கோபால் மகள் பாக்கியஷீலா (வயது 19). இவர் திருச்சியில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு  படித்து வருகிறார். இவர் 26 வயது பட்டதாரியை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்தார். 
இந்நிலையில் நேற்று முன்தினம் கொக்குபட்டியில் வீட்டில் யாரும் இல்லாதபோது பாக்கியஷீலாவும், அவரது காதலனும் பேசிக்கொண்டு இருந்தனர். இதை அறிந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது காதலர் தப்பி ஓடிவிட்டார். 
இந்தநிலையில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாக்கியஷீலா நேற்று முன்தினம் ஒரு புகார் கொடுத்தார். அதில் தப்பியோடிய காதலனை கண்டுபிடித்து சேர்த்து வைக்கும்படி கூறி இருந்தார். இதையடுத்து நேற்று போலீசார் பாக்கியஷீலாவை வரவழைத்து விசாரித்தனர். அப்போது போலீசார் பாக்கிய ஷீலாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து  பாக்கியஷீலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன் நேற்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து பாக்கியஷீலா கண்ணீர் மல்க கூறும்போது, என்னை போலீசார் தாக்கினார்கள். எனது புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் பாக்கியஷீலாவை அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமரசம்  செய்தனர். 

Next Story