உத்தமபாளையத்தில் 480 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்; தேனி கலெக்டர் தகவல்
உத்தமபாளையம் குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் 480 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது என்று தேனி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் 480 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது என்று தேனி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள், வீடுகளில் இருந்தபடி சிகிச்சை பெறுகின்றனர். தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் தேனி, போடி, பெரியகுளம் உள்ளிட்ட இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உத்தமபாளையத்தில், கோம்பை சாலையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் அந்த வீடுகள் இன்னும் பயனாளிகளிடம் ஒப்படைக்கவில்லை. இதற்கிடையே குடிசை மாற்று வாரிய கட்டிடங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து, கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். இதையடுத்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, அந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்தார்.
480 படுக்கை வசதி
பின்னர் அவர் கூறுகையில், உத்தமபாளையம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 450 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில், முதல்கட்டமாக 160 வீடுகளில் சிகிச்சை மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு குடியிருப்பில் 3 படுக்கைகள் வீதம் மொத்தம் 480 படுக்கை வசதிகள் அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த மையம் பயன்பாட்டுக்கு வரும். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.
Related Tags :
Next Story