தேனியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடை வீதிகளில் குவிந்த பொதுமக்கள்
தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
தேனி:
தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலையாக உருவெடுத்து வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி அதிகாலை வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்று இருந்த நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கிக்கொள்வதற்காக அது ரத்து செய்யப்பட்டது. இதனால் தேனியில் அனைத்து கடைகளும் நேற்று திறந்திருந்தன.
அத்தியாவசிய பொருட்கள்
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைவீதிகளில் குவிந்தனர். இதனால் தேனியில் உள்ள முக்கிய கடைவீதியான எடமால்தெரு, பகவதியம்மன் கோவில் தெரு மற்றும் பிரதான சாலைகளான கம்பம் சாலை, மதுரை சாலை, பெரியகுளம் சாலை ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்டது. அங்கு உள்ள கடைகளிலும் கூட்டம் அதிகம் இருந்தது. பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மொத்தமாக வாங்கி சென்றனர்.
போக்குவரத்து நெரிசல்
பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால் தேனியில் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் ஆங்காங்கே நின்று கொண்டு போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஊரடங்கு நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளதால் டாஸ்மாக் கடைகளிலும் நேற்று கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
இதேபோல் உத்தமபாளையம், ஆண்டிப்பட்டி, சின்னமனூர், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்.
Related Tags :
Next Story