கொரோனா பாதிப்புடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே நடமாடினால் வழக்கு; போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
கொரோனா பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் காவலன் செயலி மூலம் கண்காணிக்கப்படுவதாகவும், அவர்கள் வெளியே நடமாடினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்தார்.
தேனி:
கொரோனா பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் காவலன் செயலி மூலம் கண்காணிக்கப்படுவதாகவும், அவர்கள் வெளியே நடமாடினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்தார்.
கண்காணிப்பு
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தேனி மாவட்ட போலீஸ் துறை சார்பாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் இருப்பவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் 'தேனி காவலன்' என்ற செல்போன் செயலியில் சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்மூலம் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனியாக கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்டவர்களின் தகவல்கள் சுகாதாரத்துறை மூலம் தினமும் பெறப்பட்டு அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இந்த செயலியை அவர்களின் செல்போனில் பதிவிறக்கம் செய்யச் சொல்லி, அதன் பயன்பாடுகள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த செயலியை அவர்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
வழக்குப்பதிவு
தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்கள் வீட்டில் இருந்து சுமார் 15 அடி தூரத்துக்கும் மேல் நகர்ந்து சென்றால் அந்த தகவல் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு குறுஞ்செய்தியாக வந்துவிடும். இதன்மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வெளியே செல்லாமல் கண்காணிக்கப்படுகிறது. அதையும் மீறி யாரேனும் வீட்டை விட்டு வெளியே சென்றால் அவர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்படும். மாவட்டத்தில் தனிமைப்படுத்தும் விதியை மீறிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வெளியே செல்லக்கூடாது. அப்படி யாரேனும் வெளியே செல்வது தெரிய வந்தாலோ, பொதுமக்களிடம் இருந்து இதுகுறித்த புகார் வந்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் தங்கள் குடியிருப்பு பகுதியில் தனிமைப்படுத்தும் விதியை யாரேனும் மீறினால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு 100 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story