ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்தல் 3 பேர் கைது
ஊரடங்கு காலத்தில் விற்பனை செய்ய ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்தல் 3 பேர் கைது
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் பஸ்நிலையம் அருகே மாலையம்மன் கோவில் செல்லும் வழியில் மர்மநபர்கள் சிலர் ஆட்டோவில் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை ஏற்றுவதாக கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால், ஏட்டுகள் சீனிவாசன், மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது போலீசாரை கண்டதும் மர்மநபர்கள் ஆட்டோவில் அங்கிருந்து தப்பி சென்றனர். உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் அவர்களை பின்னால் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்த கணபதி(வயது 39), நாகலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(50), விளக்கூர் புது காலனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஏழுமலை(38) என்பதும் மலையம்மன் கோவில் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி முழு ஊரடங்கு நாட்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து கணபதி, ராஜேந்திரன் மற்றும் ஏழுமலை ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 960 மதிப்பிலான 1,008 மதுபாட்டில்கள் மற்றும் ஆட்டேவையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story