கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் பலகோடி மதிப்பிலான டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி பொருட்கள் தேக்கம்


கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் பலகோடி மதிப்பிலான டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி பொருட்கள் தேக்கம்
x
தினத்தந்தி 9 May 2021 5:35 PM GMT (Updated: 9 May 2021 5:35 PM GMT)

கரூரில் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் பலகோடி மதிப்பிலான டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன.

கரூர்
கடைகள் அடைப்பு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2-து அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அமலில் உள்ளன. இதில் பெரிய நிறுவனங்களில் 50 சதவீதம் பணியாளர்களை கொண்டே இயக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. மேலும் துணி கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன.  மேலும் டீக்கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவைகள் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. 
இதில் கரூர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மூலப்பொருட்களை வழங்க கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மூலப் பொருட்கள் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் தேக்கம்
இதுகுறித்து டெக்ஸ்டைல் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளதால் நாளொன்றுக்கு 40 பேர் பணியாற்றும் நிறுவனங்களில், தற்போது 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் பணியாளர்கள் வருகை குறைவு காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன.
பெரிதும் சிரமம்
இதனால் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறோம். கரூர் மாவட்டத்தை பொருத்தவரை 100-க்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள் தரக்கூடிய கடைகள் அமைந்துள்ளன. இங்கு கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களான நூல் கண்டுகள், பட்டன்கள் உள்ளிட்டவற்றை பெறுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பணியாளர்கள் 
ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் கூறுகையில், ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து வருகிறோம். 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதால் எங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு, வேலை இழக்கும் சூழ்நிலை உள்ளது. 
இதனால் வீட்டு வாடகை, மளிகை பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டு வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் எங்கள் குழந்தைகள் கேட்கக் கூடிய தின்பண்டங்களை வாங்கி கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

Next Story