திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.13 கோடிக்கு மது விற்பனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரேநாளில் ரூ.13 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, மே.10-
ரூ.13 கோடிக்கு மது விற்பனை
கொரோனா தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு சமயத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மதுபிரியர்கள் நேற்று முன்தினத்தில் இருந்து தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி குவிக்க தொடங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் வழக்கமாக ஒரு நாளைக்கு ரூ.3½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெறும். ஆனால் நேற்று முன்தினம் மட்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.13 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்று உள்ளது. தொடந்து நேற்றும் மதுபிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் பகலில் இருந்தே மதுபானங்களை வாங்க சென்றனர்.
விறுவிறுப்பாக நடந்தது
பெரும்பாலான கடைகளில் மதியமே மதுபானங்கள் விற்று தீர்ந்து விட்டது. நேற்று மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்து இருந்தது. இறுதி நேரம் வரையிலும் சில கடைகளில் விறு, விறுப்பாக மதுவிற்பனை நடந்தது. சரியாக மாலை 6 மணிக்கு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் முன்பு மதுபானம் கிடைக்காமல் பலர் ஏக்கத்துடன் நின்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கலைந்து செல்ல கூறினர்.
பின்னர் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதையடுத்து கடை பணியாளர்கள் போலீசார் முன்னிலையில் கடையை பூட்டு போட்டு பூட்டி சீல் வைத்தனர். நேற்று மாலையே மாவட்டத்தில் உள்ள 220 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story