சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் பணிகள் தீவிரம்
குடிமங்கலம் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குடிமங்கலம்
குடிமங்கலம் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சின்ன வெங்காயம்
குடிமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் சொட்டுநீர் அமைத்து காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் விலை ஏற்ற இறக்கங்களை பொருத்து இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குடிமங்கலம் பகுதியில் வெங்காயம் விதை மூலம் நாற்றங்கால் அமைத்து 40 நாட்களுக்கு பிறகு பிடுங்கி நடவு செய்தும் விதை வெங்காயமாகவும் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் திண்டுக்கல், உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.
சாகுபடி தீவிரம்
விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைப்பதால் வெங்காய சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். சின்ன வெங்காயம் சாகுபடி குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது
குடிமங்கலம் பகுதியில் வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 400 கிலோ விதை வெங்காயம் தேவைப்படுகிறது. வெங்காய சாகுபடிக்கு களை எடுத்தல், தண்ணீர் பாய்ச்சுதல், மருந்து தெளித்தல் என ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து 4 முதல் 5 மாதங்கள் வரை இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும். இதனால் விலை குறைவான நேரங்களில் இருப்பு வைத்து விலை அதிகமான நேரங்களில் விற்பனை செய்யவும் முடியும்.
வெங்காயத்தை இருப்பு வைப்பதால் விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைத்து வருகிறது. சின்னவெங்காயம் 60 முதல் 65 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். சின்ன வெங்காயம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் போது அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் 2,3 நாட்கள் வெயிலில் உலர வைக்கப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story