கடலூரில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்


கடலூரில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 9 May 2021 7:13 PM GMT (Updated: 9 May 2021 7:13 PM GMT)

முழு ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி கடலூரில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடலூர், 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், இதை முன்னிட்டு பொதுமக்களும், நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக (நேற்று முன்தினம், நேற்று) 2 நாட்கள் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் வழக்கம் போல் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து இருக்கும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி நேற்று கடலூரில் வழக்கம் போல் அனைத்து கடைகளும் திறந்து இருந்தது. இதனால் காலை முதலே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைவீதிகளில் குவிந்தனர். காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் தினந்தோறும் மதியம் 12 மணி வரை திறந்து இருக்கும் என்று அறிவித்தும், இந்த கடைகளில் தான் பெரும்பாலான கூட்டம் அலைமோதியது.

மீன் மார்க்கெட்

குறிப்பாக இறைச்சி கடைகளிலும் கூட்டம் அதிகரித்தது. மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட்டுகளிலும் கூட்டம் அலைமோதியது. இது தவிர மளிகைக்கடை, காய்கறி கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வில்லை. சானி டைசர் ஒரு சில கடைகளில் மட்டும் வைக்கப்பட்டு இருந்தது. பெரும்பாலான கடைகளில் சானிடைசர் வழங்கப்படவில்லை.
இது தவிர சலூன் கடைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் சலூன் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருத்து முடி திருத்தம் செய்து சென்றதை காண முடிந்தது. இதேபோல் எலக்ட்ரிக்கல் கடை, மொத்த விற்பனை கடைகளும் திறக்கப்பட்டு விற்பனை அதிகரித்தது.

போக்குவரத்து நெரிசல்

ஒரே நேரத்தில் மக்கள் ஏராளமானோர் குவிந்ததால் கடைவீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்துடன் சாலைகளை கடந்து சென்றனர். குறிப்பாக கடலூர் வண்டிப்பாளையம் ரோடு, லாரன்ஸ் ரோடு, தேரடி தெரு ஆகிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேவேளை மதிய நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. பின்னர் மாலை நேரத்தில் மீண்டும் கூட்டம் அதிகரித்தது.

Next Story