கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் 2 வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், கடைவீதிகள் மற்றும் சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
திருப்பூர்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் 2 வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், கடைவீதிகள் மற்றும் சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இன்று முதல் முழு ஊரடங்கு
கொரோனாவின் பாதிப்பு தமிழகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. அந்த அளவிற்கு பாதிப்பு இருந்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று திங்கட்கிழமை முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கில் கட்டுப்பாடுகளும், சில தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருந்த நிலையில் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் கடந்த 2 நாட்கள் தளர்வுகளை வழங்கியது.
காய்கறி விற்பனை மும்முரம்
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கினர். அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டதால் நேற்று காலை திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வடக்கு உழவர் சந்தையில் காலையில் காய்கறிகள், பழவகைகள் வாங்க பொதுமக்கள் பலர் சென்றனர். ஊரடங்கு அச்சத்தின் காரணமாக குறைவான விவசாயிகளே அங்கு பொருட்கள் விற்பனை செய்த வந்தனர்.
இதனால் பொருட்கள் அனைத்தும் விரைவாக அங்கு விற்பனையாகிவிட்டன. சந்தையும் வெறிச்சோடி காணப்பட்டது. காலதாமதமாக வந்த ஒரு சிலர் கைகளில் வெற்று பைகளுடன் சோகமாக திரும்பி சென்றனர். இது ஒரு புறம் இருந்தாலும் சந்தைக்கு அருகே ரோட்டோரம் ஏராளமானவர்கள் தற்காலிக கடைகள் அமைத்திருந்தனர். அங்கு காய்கறி விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது.
காத்திருந்த பயணிகள்
இதுபோல் பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருகிற வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களில் சென்றனர். இதனால் அவ்வப்போது வந்த பஸ்களில் முண்டியடித்தபடி ஏறி இடம் பிடித்தனர். இதுபோல் பல மாவட்டங்களுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகே பஸ்கள் இயக்கப்பட்டதால், தொழிலாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பஸ்களில் சென்றனர்.
மேலும், மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தனியார் வேன்கள் மூலமாகவும் தொழிலாளர்கள் சென்றனர். இதற்கிடையே கூட்டம் அதிகமாக இருந்ததால் தனியார் மினிபஸ்களும் அதிகமாக பஸ் நிலையங்களில் இயங்கின.
தென்னம்பாளையம் சந்தை
திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையம் சந்தையிலும் நேற்று காலை காய்கறிகள் மற்றும் மீன் உள்ளிட்டவைகள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சந்தைக்கு உள்ளே வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. சந்தை முன்புறம் நின்ற தனியார் அமைப்பினர் வாகனங்களை வெளியே நிறுத்திவிட்டு செல்லும்படி அறிவுறுத்தினர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தபடி சென்றன.
மேலும், சந்தைக்கு வந்தவர்களுக்கு மாநகராட்சி சார்பில் வேனில் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதிலும் பலர் கொரோனா பரிசோதனை செய்தனர். சந்தைக்கு உள்புற பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் விற்பனை மும்முரமாக நடந்தது. பொதுமக்கள் 2 வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். மேலும், ஆங்காங்கே மாநகராட்சி பணியாளர்கள் கிருமிநாசினியும் தெளித்தனர். முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே சந்தைக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
5 டன் மீன்கள் விற்பனை
திருப்பூர் மீன் சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 60 முதல் 70 டன் மீன்கள் விற்பனைக்கு வரும். இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் மற்றும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக நேற்று ஆந்திராவில் இருந்து 5 டன் அணை மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இந்த மீன்களும் உடனே விற்றுத்தீர்ந்தன. மீன்பிரியர்கள் வரிசையாக காத்து நின்று தங்களுக்கு பிடித்தமான மீன்களை வாங்கி சென்றனர். இதுபோல் இறைச்சி கடைகளிலும் பலரும் இறைச்சிகளை வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.
காலதாமதமாக வந்த பலரும் மீன்கள் இன்றி இருந்ததால் ஏமாற்றத்துடன் சென்றனர். இதனைத்தொடர்ந்து மாநகரில் அரிசிக்கடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் உள்ள மளிகை கடைகள் மற்றும் அரிசிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஒட்டுமொத்தமாக மாநகரில் பலரும் குவிந்ததால் நேற்று பல்வேறு பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
பல்லடம்
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் காரணமாக இன்று திங்கட்கிழமை முதல் மே 24-ந்தேதி வரை ஊரடங்கு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக ஏற்கனவே அறிவித்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு நேற்று ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் பல்லடம் கடைவீதியில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
மளிகை, காய்கறி, பேக்கரி, உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக, மக்கள் அதிக அளவில் திரண்டனர். கடைவீதியில் சாலையோரம் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் கடைவீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story