குமரி மாவட்டத்தில் கன மழை


குமரி மாவட்டத்தில் கன மழை
x
தினத்தந்தி 9 May 2021 7:29 PM GMT (Updated: 9 May 2021 7:29 PM GMT)

குமரி மாவட்டத்தில் நேற்று கன மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் நேற்று கன மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கோடை மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் வரை மாவட்டம் முழுவதும் வெயில் அடித்தது. மதியம் திடீரென வானில் கார் மேகம் சூழ்ந்தது. தொடர்ந்து மாலை வரை சிறு, சிறு இடைவெளியுடன் மழை பெய்தது. சில இடங்களில் இடி,மின்னலுடன் கனமழையாக பெய்தது.
மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இதுபோல் சுவாமியார்மடம், அழகியமண்டபம், தக்கலை, வில்லுக்குறி உள்பட பல இடங்களில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.
சாலைகளில் வெள்ளம் 
நாகர்கோவில் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ½ மணிநேரம் கொட்டி தீர்த்தது. இதனால், நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 
மழைநீருடன், சாக்கடையும் கலந்து சாலையில் ஆறாக ஓடியதால் நடந்து சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதியடைந்தனர்.நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பெருஞ்சாணி-5.2, புத்தன் அணை- 4.6, சிற்றார்1- 3, சிற்றார் 2- 17.4, மாம்பழத்துறையாறு- 1.4, கொட்டாரம் -1.4, மயிலாடி- 6.8, நாகர்கோவில் -1.1, சுருளகோடு- 7, அடையாமடை- 12, குருந்தங்கோடு- 8.4 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. இந்த மழையால் அணைகளுக்கு மித  மான அளவு தண்ணீர் வந்தது.
குமரி மாவட்டத்தில் கோடை மழை நீடித்து வருவதால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story