கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்


கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 10 May 2021 2:20 AM IST (Updated: 10 May 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

அரியலூர்:

கூட்டம் அலைமோதல்
கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இன்று(திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரியலூரில் நேற்று அனைத்து வணிக நிறுவனங்களும் திறந்திருந்தன. முழு ஊரடங்கு நாட்களில் காய்கறி, மளிகை கடைகளை தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நகை மற்றும் ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து கடைகளிலும் குவிந்தனர். 25 சதவீதம் பேர் மட்டுமே முக கவசம் அணிந்து இருந்தனர். பஸ்களில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகமாக இருந்தது.
போக்குவரத்து நெரிசல்
நடந்து சென்றவர்களை விட சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஒவ்வொரு வாகனத்திலும் குறைந்தது 3 பேர் பயணம் செய்தனர். தேரடியில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேநிலை தொடர்ந்து நீடித்தால் ஊரடங்கு அறிவித்ததற்கு பயன் இல்லாமல் போகும். எனவே இருசக்கர வாகன போக்குவரத்தை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.
நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவதற்கு இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறைவாகவே உள்ளது.
கட்டுப்பாடுகளை விதித்து...
கடந்த ஆண்டு ஊரடங்கின்போது மக்கள் அதிக அச்சத்துடன் வெளியே வராமல் இருந்தனர். ஆனால் தற்போது கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து 2-ம் அலை தீவிரமாக பரவும் நிலையில், பொதுமக்களிடையே அச்ச உணர்வே இல்லை. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளில் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளதாக, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். எனவே போலீசார், இருசக்கர வாகனங்களில் செல்ல கட்டுப்பாடுகளை விதித்து, தடுத்தால்தான் நோய்த்தொற்று பரவுவது குறையும் என்றும் கூறினார்கள். இதேபோல் மாவட்ட பகுதிகளிலும் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Next Story