அரசு பஸ் டிரைவர் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து 21 பவுன் நகைகள் கொள்ளை


கொள்ளை சம்பவம் நடந்த வீடு
x
கொள்ளை சம்பவம் நடந்த வீடு
தினத்தந்தி 9 May 2021 8:52 PM GMT (Updated: 9 May 2021 8:52 PM GMT)

குன்னம் அருகே, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து அரசு பஸ் டிரைவரின் மனைவி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 21 பவுன் நகைகளை முகமூடி, டவுசர் அணிந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.

குன்னம்:

அரசு பஸ் டிரைவர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சிறுகன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் பெரம்பலூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். தினமும் பணிக்கு செல்லும் பாஸ்கர் நள்ளிரவு நேரத்தில்தான் மீண்டும் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
அதேபோல் பாஸ்கர் நேற்று முன்தினம் பணிக்கு சென்றார். இதையடுத்து வீட்டில் பாஸ்கரின் மனைவி சத்யா(29) மற்றும் அவர்களது குழந்தைகள் 2 பேர் இருந்தனர்.
முகமூடி அணிந்த மர்ம நபர்கள்
இந்நிலையில் நள்ளிரவு சுமார் 2 மணியளவில், வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டுள்ளது. இதனால் திடுக்கிட்டு எழுந்த சத்யா, தனது கணவர் பாஸ்கர்தான் பணி முடிந்து வந்துள்ளார் என்று நினைத்து, முன்பக்க கதவை திறந்து பார்த்துள்ளார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் மீண்டும் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்து விட்டார். அப்போது முகமூடி, டவுசர் மற்றும் பனியன் அணிந்த 2 பேர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்துள்ளனர். மற்றொருவர் வீட்டின் வெளியே நோட்டமிட்டுள்ளார்.
நகைகள்-பணம் கொள்ளை
வீட்டிற்குள் வந்த 2 பேரும் திடீரென சத்யாவை பிடித்து அவரது வாயில் துணியை வைத்து அழுத்தினர். மேலும் சத்தியாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 17 பவுன் தாலிச்சங்கிலி, கையில் அணிந்திருந்த 4 பவுன் வளையல் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
தொடர்ந்து சத்யாவை மிரட்டியவாறு வீட்டின் பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரத்தை எடுத்துக்கொண்டனர். அப்போது பாஸ்கர் வண்டியில் வரும் சத்தம் கேட்டு கொள்ளையர்கள் பின்பக்க வாசல் வழியே வெளியேறி, 3 பேரும் தப்பியோடி விட்டனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து சத்யா கொடுத்த புகாரின்பேரில் பாடலூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், மங்களமேடு துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Next Story