நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
திருமாந்துறை சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மங்களமேடு:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இன்று(திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்த கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் அரசு பஸ், தனியார் பஸ், கார், வேன் போன்ற பல்வேறு வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் அங்கிருந்து ஏராளமான வாகனங்கள் தொடர்ந்து வந்தன. அவ்வாறு வந்த வாகனங்கள் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி மையத்தை கடந்து செல்ல அணிவகுத்து நின்றன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சுங்கச்சாவடி பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் கூடுதலாக 2 பாதைகளை திறந்து வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுத்தனர். அதன்பின்னர் வாகனங்கள் ஒவ்வொன்றாக சுங்கச்சாவடியை கடந்து சென்றன. இருப்பினும் அதிக வாகனங்கள் சென்றதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்களில் வந்தவர்கள் அவதியடைந்தனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி சுங் கச்சாவடிகளிம் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதனால் சொந்த ஊருக்கு செல்வதற்கு பல மணி நேரம் காலதாமதம் ஏற்படுகிறது, என்றனர்.
Related Tags :
Next Story