கொடுமுடி அருகே தேங்காய் நார் மில்லில் தீ விபத்து; எந்திரங்கள் எரிந்து நாசம்
கொடுமுடி அருகே தேங்காய் நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்திரங்கள் மற்றும் தேங்காய் நார் எரிந்து நாசம் ஆனது.
கொடுமுடி
கொடுமுடி அருகே தேங்காய் நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்திரங்கள் மற்றும் தேங்காய் நார் எரிந்து நாசம் ஆனது.
தேங்காய் நார் மில்
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கம்மங்காட்டுகளத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருக்கு சொந்தமான தேங்காய் நார் மில் கொடுமுடி அருகே உள்ள வெற்றிக்கோனார்பாளையத்தில் உள்ளது.
இந்த மில்லை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஆலாம்பாடியை சேர்ந்த செந்தில் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார்.
கொழுந்துவிட்டு...
இந்த மில்லில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் உள்ளூரை சேர்ந்தவர்கள் என மொத்தம் 15 பேர் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். மதியம் 1.30 மணி அளவில் மில்லின் ஒரு பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதைத்தொடர்ந்து தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. உடனே அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
எரிந்து நாசம்
உடனே இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கொடுமுடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மொடக்குறிச்சி தீயணைப்பு வாகனமும் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தது.
பின்னர் 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. தீயணைப்பு வீரர்களின் கடுமையான போராட்டத்துக்கு பின்னர் மாலை 6 மணி அளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் நார் மில் முற்றிலும் எரிந்து நாசம் ஆனதுடன், அதில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் மற்றும் தேங்காய் நாரும் எரிந்து நாசம் ஆனது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
Related Tags :
Next Story