மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முற்றிலும் புறக்கணிப்பு


மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முற்றிலும் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 10 May 2021 3:04 AM IST (Updated: 10 May 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு இன்று தொடங்கும் நிலையில் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்புவிதிமுறைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட நிலை இருந்தது.

விருதுநகர்,
 முழு ஊரடங்கு இன்று தொடங்கும் நிலையில் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்புவிதிமுறைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட நிலை இருந்தது. 
 அனுமதி 
தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) முதல் முழுஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் நேற்றும், நேற்று முன்தினமும் அனைத்து வணிக நிறுவனங்களும் காலையில் இருந்து இரவு வரை செயல்பட அனுமதி அளித்தது.
 இதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் முழுவதும் சிறுபெட்டி கடைகள் முதல் பெரும் வணிக நிறுவனங்கள் வரை நேற்று முன்தினமும், நேற்றும் முழுநேரமும் செயல்பட்டன.
 புறக்கணிப்பு
அதிலும் குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மெயின் பஜாரில் அதிகாலை முதலே செயல்படதொடங்கின.
 இந்தநிலையில் விருதுநகர் மெயின் பஜாரில் கொரோனாதடுப்பு விதிமுறைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது. மெயின் பஜார் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததை காணமுடிந்தது. பொதுமக்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்காக இருந்தாலும் பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் பகல் 12 மணிவரை செயல்படும் என்று அரசு அறிவித்திருந்த போதிலும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும், காய்கறிகள் வாங்குவதற்கும் பெருந்திரளாக மெயின் பஜாரில் கூடியதால் சமூக இடைவெளி முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது.
கண்காணிப்பு 
 இதேபோன்று பஸ்களில் 50 சதவீத பயணிகளை மட்டும் அனுமதிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள போதிலும் நேற்று அனைத்து பஸ்களிலும் பயணிகள் நின்று கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து மக்கள் அதிக எண்ணிக்கையில் பொருட்களை வாங்குவதற்காக வந்திருந்த நிலையில் கிராமப்புற பஸ்களில் பெரும் கூட்டம் செல்லும் நிலை இருந்தது. 
விருதுநகர் மெயின் பஜாரிலும், பஸ் நிலையத்திலும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டும், அதை தவிர்க்கும் வகையில் எவ்வித கண்காணிப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அறிவுறுத்தல் 
அதனால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் நிலை இருந்தது. பஸ் நிலையத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகளும் அரசு விதிமுறைப்படி பஸ்களில் பயணிகளை ஏற்றுவதற்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்படாத நிலை தான் இருந்தது.
 மொத்தத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் அரசின் கொரோனா தடுப்புவிதிமுறைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டன.

Next Story