சேதமடைந்த மேம்பாலம் சீரமைப்பு பணி விரைந்து முடிக்கப்படாத நிலை
விருதுநகர்-சாத்தூர் இடையே சேதமடைந்த நான்கு வழி சாலை மேம்பாலம் சீரமைக்கும் பணியினை விரைந்து முடிக்கப்பட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர்-சாத்தூர் இடையே சேதமடைந்த நான்கு வழி சாலை மேம்பாலம் சீரமைக்கும் பணியினை விரைந்து முடிக்கப்பட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சேதமடைந்த மேம்பாலம்
விருதுநகர் - சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலையில் ஆர்.ஆர். நகரில் உள்ள மேம்பாலம் நான்கு முறை சேதமடைந்தது.
5-வது முறையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ந் தேதி சேதமடைந்து பக்கவாட்டு சுவர் உடைந்து கீழே விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக ரோட்டில் யாரும் செல்லாத நிலையில் உயிர்ப்பலி ஏதும் ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்கும் படி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் அறிவுறுத்தியது.
நடவடிக்கை
ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் சேதமடைந்த மேம்பாலத்தின் தென் பகுதியை போலீசார் ஒரு வழிப்பாதையாக மாற்றியதால் அந்த பகுதி விபத்து பகுதியாக மாறியது.
இதுபற்றி சுட்டிக்காட்டியும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாராமுகமாகவே இருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் சட்டமன்ற தேர்தலை ஒட்டி பிரச்சாரத்திற்காக வந்த மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை இணை மந்திரி விகேசிங்கிடம் இதுபற்றி சுட்டிக்காட்டப்பட்ட நிலையில அவர் சேதமடைந்த மேம்பாலத்தினை ஆய்வு செய்து மேம் பாலத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
தொடங்கியது
அதனைத்தொடர்ந்து சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது. ஆனாலும் நான்கு வழி சாலையில் சீரான வாகன போக்குவரத்தின் அத்தியாவசியத்தை கருத்தில் கொள்ளாமல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்கிறது.
பணி மேற்கொள்ளப்பட்டு பல நாட்களாகியும் பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளது. பணிகளை விரைந்து முடிப்பதற்கு தேவையான பணியாளர்களை பணி அமர்த்தாத நிலை உள்ளது.
அவசியம்
எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சீரமைப்பு பணி நடைபெறும் இடத்தை நேரடியாக கண்காணித்து பணிகளை தரமானமுறையில் விரைந்து முடித்து அந்த இடத்தில் நடைபெறும் விபத்துகளை தவிர்க்கவும், சீரான வாகன போக்குவரத்திற்கு உதவிடும் வகையில் சீரமைப்பு பணியை விரைவுபடுத்தவும் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சேதமடைந்த மேம்பாலத்தின் இடு பொருட்களை சேகரித்து ஆய்வு செய்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாலம் சேதமடைந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
Related Tags :
Next Story