சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
கொரோனா தடுப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளருமான முகமது நசிமுதின் நேற்று சேலம் வந்தார். பின்னர் அவர், கலெக்டர் ராமனுடன் ஆத்தூர் அரசு மருத்துவமனை, பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் பெரிய கிருஷ்ணாபுரம் மாதிரிப்பள்ளி தங்கும் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தும் மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவர் மையங்களில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றின் தரம் குறித்தும், அவர்களுக்கான தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். நோய் தொற்று பாதித்தவர்களிடம் நலம் விசாரித்தார்.
அவசர சிகிச்சை பிரிவு
இதனை தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு மற்றும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி மையத்தையும் கூடுதல் தலைமை செயலாளர் முகமது நசிமுதின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் கைபேசி மூலம் காணொலி காட்சியின் வாயிலாக சிகிச்சை முறைகள் மற்றும் உணவுகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
தடையின்றி ஆக்சிஜன்
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அனைத்து அரசு மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் முழுமையாக ஏற்படுத்த வேண்டும். நோயாளிகளில் ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு தடையின்றி ஆக்சிஜன் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு, மாவட்டத்தில் ஆக்சிஜன் இருப்பு அளவை தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது மற்றும் முழு ஊரடங்கை முழுமையாக செயல்படுத்துவது குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முகமது நசிமுதின் ஆலோசனை மேற்கொண்டார்.
Related Tags :
Next Story