ராசிபுரத்தில் கட்டிட மேஸ்திரி குத்திக்கொலை சுற்றுலா வேன் டிரைவர் கைது
ராசிபுரத்தில் கட்டிட மேஸ்திரி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட சுற்றுலா வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி 23-வது வார்டு நாராயணன் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஜெயராமன் (வயது 24). இவர் வெளியூரில் தங்கி கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவரது பெற்றோர் இறந்து விட்டதால் அண்ணன் பூபதியுடன் வசித்து வந்தார். அண்ணன், தம்பி 2 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்த ஜெயராமன், நோட்டக்காரர் தெருவில் உள்ள பொது கழிப்பிடத்திற்கு சென்றார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த சுற்றுலா வேன் டிரைவரான ஜெயராமனின் சித்தப்பா மூர்த்தி (45) அவரை வழிமறித்து வேறு இடத்தில் இயற்கை உபாதையை கழிக்குமாறு கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருவரும் குடிபோதையில் இருந்ததாகவும், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
குத்திக்கொலை
அப்போது ஒரு கட்டத்தில் மூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஜெயராமனின் நெஞ்சில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த ஜெயராமன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஜெயராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற ஜெயராமனுக்கு, கொரோனா வைரஸ் நோய் தொற்று இருக்கும் என்ற அச்சத்தில் அவரை வழிமறித்து மூர்த்தி தகராறு செய்தது தெரியவந்தது.
டிரைவர் கைது
இதையடுத்து மூர்த்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே சொத்து பிரச்சினை காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது என கூறப்படுவதால், அந்த முன்விரோதத்தில் கட்டிட மேஸ்திரி ஜெயராமன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட மேஸ்திரி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Related Tags :
Next Story