நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் சாவு பலி எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் சாவு பலி எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 May 2021 4:42 AM IST (Updated: 10 May 2021 4:44 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகினர். இதனால் இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்து உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் தொடக்கத்தில் உயிர்பலி மிக குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் கொரோனாவுக்கு 132 பேர் இறந்து இருந்தனர்.

இந்த நிலையில் நாமக்கல் சின்னமுதலைப்பட்டியை சேர்ந்த 53 வயது நபருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென தலைவலி, சளி தொல்லை ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலன்இன்றி இறந்தார்.

இதேபோல் கொரோனா உறுதி செய்யப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திருச்செங்கோடு சீனிவாசம்பாளையம் பகுதியை சேர்ந்த 53 வயது நபரும் சிகிச்சை பலன்இன்றி இறந்தார். மேலும் ராசிபுரம் அருகே உள்ள கார்கூடல்பட்டியை சேர்ந்த 56 வயது நபர், கொண்டம்பட்டியை சேர்ந்த 77 வயது முதியவரும் கொரோனாவுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக இறந்தனர்.

ஒரே நாளில் 4 பேர் சாவு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இதுவரை இம்மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று இறந்த நபர்களில் 2 பேர் இணை நோய் உள்ளவர்கள் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story