கோவில்பட்டியில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடின


கோவில்பட்டியில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 10 May 2021 2:41 PM GMT (Updated: 10 May 2021 2:41 PM GMT)

கோவில்பட்டியில் முழு ஊரடங்கை முன்னிட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நேற்று முழு ஊரடங்கை முன்னிட்டு போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் பஜார், சாலைகள் வெறிச்சோடின. பகல் 12 மணி வரை காய்கறி, பலசரக்கு கடைகள் திறந்திருந்தன.
சாலைகள் வெறிச்சோடின
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப் படுத்தும் வகையில் தமிழகத்தில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. வருகிற 24-ந்தேதி வரை 2 வாரங்களுக்கு இந்த ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்.
முழு ஊரடங்கு காரணமாக  போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நகரங்கள் மட்டுமின்றி கிராமபகுதிகளிலும் போலீசார் பணியில் ஈடுபட்டனர். கோவில்பட்டி நகரில் முக்கிய சந்திப்புகள் மற்றும் புறநகர் எல்லை பகுதிகளில் பூத் அமைத்து அங்கு போலீசார் பணியில் இருந்தனர்.
அரசு, தனியார் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடியிருந்தன. சாலைகளும் ஆட்கள் நடமாட்டம் இன்றி கணப்பட்டன.
காலையில் காய்கறி விற்பனை
காலை நேரத்தில் கோவில்பட்டி காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்களும், சில்லறை வியாபாரிகள் வழக்கம் போல் வந்து காய்கறிகள் வாங்கி சென்றனர். பெரும்பாலானவர்கள் நடந்தே வந்தனர். ஓட்டல்கள், தேநீர் கடைகள் காலை நேரத்தில் செயல்பட்டன. அங்கு பார்சல் சேவை மட்டும் இருந்தது. ஒரு சில தேநீர் கடைகளில் வாடிக்கையாளர்கள் அங்கேயே வாங்கி அருந்தி சென்றனர். பகல் 12 மணிக்கு பின்னர் நகரிலுள்ள முக்கிய சாலைகள், தெருக்கள், பஜார்கள் வெறிச்சோடி கிடந்தன.
மற்றபடி நகரில் ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள், பர்னிச்சர், பேன்சி ஸ்டோர், வணிக வளாகங்கள் போன்ற அனைத்தும் மூடி இருந்தன. பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல் செயல்பட்டன. 
அத்தியாவசியப் பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த அளவில் பணியாளர்களுடன் செயல்பட்டன. அதே போல் வங்கிகள் செயல்பட்டன. ஏ.டி.எம்.களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. 
அபராதம் வசூல்
நகரசபை ஆணையாளர் ராஜாராம் மேற்பார்வையில் சுகாதாரா ஆய்வாளர்கள் வள்ளிராஜ், முருகன், காஜா ஆகியோர் கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரணம் எதுவும் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேருக்கு தலா ரூ.2௦௦ வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் அனைத்தும் பகல் 12 மணிக்கு மூடப்பட்டன. இதை தொடர்ந்து அந்த சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. மெயின் ரோட்டில் கடைகள் மூடப்பட்டு இருந்ததால் பரபரப்பு இல்லாமல் அமைதியாக இருந்தது.

Next Story