ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஊரடங்கால் கடைகள் அடைப்பு மற்றும் பஸ்கள் ஓடாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
ஊரடங்கு அமல்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நேற்று முதல் வருகிற 24-ந்தேதி வரை 2 வாரங்களுக்கு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் வணிக வளாகங்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை திறக்கப்படவில்லை.
அதேநேரம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை நிறைவேற்றும் வகையில் காய்கறி, மளிகை, பால், மருந்து கடைகள், மீன்-இறைச்சி கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன.
மக்கள் நடமாட்டம்
இந்த கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட்டன.
இதனால் மக்கள் தேவையான பொருட்களை காலையிலேயே கடைக்கு வந்து வாங்கினர்.
ஆனால், ஒருசில பகுதிகளில் மதியம் 12 மணிக்கு பின்னரும் கடைகள் திறந்து இருந்தன.
இதை போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் அறிந்து நேரில் வந்து எச்சரித்ததால், கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன.
மேலும் ஓட்டல்கள், டீக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படவில்லை.
அதேநேரம் குறிப்பிட்ட நேரம் திறக்கப்பட்டு உணவுகள் மற்றும் டீ ஆகியவை பார்சலில் வழங்கப்பட்டது.
எனினும், கொரோனா அச்சம் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
சாலைகள் வெறிச்சோடின
அதேநேரம் ஊரடங்கால் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இதனால் பஸ்கள், வாடகை கார்கள், வேன்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை.
இதன் காரணமாக 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் திண்டுக்கல், பழனி பஸ்நிலையங்கள் காலி மைதானம் போன்று காட்சி அளித்தது.
பொது போக்குவரத்து இல்லாததால் பொதுமக்கள் அவசரத்தேவைக்கு விரும்பிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் மில் தொழிலாளர்கள், கூலித்தொழிலாளர்கள் பஸ்கள் ஓடாததால் கடும் சிரமப்பட்டனர்.
அதோடு மதியத்துக்கு பின்னர் அனைத்து கடைகளும் மூடப்பட்டதால், மக்கள் நடமாட்டம் முற்றிலும் நின்று போனது.
இதனால் மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதுதவிர அரசின் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் செயல்படவில்லை.
மேலும் வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டன.
இதனால் ஒட்டுமொத்தமாக ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story