வீடு வீடாக டோக்கன் வினியோகம் தொடக்கம்


வீடு வீடாக டோக்கன் வினியோகம் தொடக்கம்
x
தினத்தந்தி 10 May 2021 9:49 PM IST (Updated: 10 May 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்கு வீடு, வீடாக டோக்கன் வினியோகம் தொடங்கியது. முதல் தவணையாக 15-ந் தேதி முதல் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

பொள்ளாச்சி

கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்கு வீடு, வீடாக டோக்கன் வினியோகம் தொடங்கியது. முதல் தவணையாக 15-ந் தேதி முதல் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

கொரோனா நிவாரண நிதி

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட திட்டங்களில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டமும் ஒன்றாகும். 

மேலும் ரூ.4 ஆயிரம் நிவாரண நிதியில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வருகிற 15-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. 

இதற்காக பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. ரேஷன் கடை ஊழியர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து சென்று வழங்கினர். இதுகுறித்து குடிமைப்பொருள் அதிகாரிகள் கூறியதாவது:-

15-ந் தேதி முதல் வழங்கப்படும்

பொள்ளாச்சி தாலுகாவில் 90 ஆயிரத்து 354 குடும்ப அட்டை தாரர்களுக்கும், ஆனைமலை தாலுகாவில் 60 ஆயிரத்து 137 குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணையாக கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. 

இதற்காக வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி தொடங்கி உள்ளது. டோக்கன் அடிப்படையில் தினமும் 200 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்படும்.

 ஊழியர்கள் வழங்கும் டோக்கனில் ரேஷன் கடை எண், பெயர், அட்டைதாரர் பெயர், கிராமம், தெரு, நிவாரண நிதி வழங்கும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு உள்ளன. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story