தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெரியகுளம் உள்பட 15 இடங்களில் தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 49 ஆயிரத்து 219 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 15 ஆயிரத்து 770 பேரும் செலுத்தியுள்ளனர். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வந்தது. தற்போது கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால், பொதுமக்கள் நலன் கருதி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக 15 இடங்களில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, பெரியகுளம், கம்பம், போடி, சின்னமனூர், ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள நகராட்சி பள்ளி, சின்னமனூர் நகர சுகாதார நிலையம், கோம்பை, காமயகவுண்டன்பட்டி, டி.சுப்புலாபுரம், எம்.சுப்புலாபுரம், ராஜதானி, கடமலைக்குண்டு, கூடலூர் ஆகிய ஊர்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 15 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.
இந்த இடங்களில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது. அரசின் வழிகாட்டுதலின்படி அரசால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை சரிவர கடைப்பிடித்து, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த தகவலை தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
Related Tags :
Next Story