தனியார் பள்ளி நிர்வாகியை கடத்தி ரூ 4 லட்சம் பறிப்பு அண்ணன் மகன் உள்பட 7 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் வீ்ட்டுமனை வாங்குவதாக கூறி வரவழைத்து தனியார் பள்ளி நிர்வாகியை கடத்தி ரூ 4 லட்சத்தை பறித்த அவரது அண்ணன் மகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி
தனியார் பள்ளி நிர்வாகி
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்தவா் முகமது ரியாசுதீன் (வயது 46). தனியார் பள்ளி நிர்வாகியான இவருக்கும், இவருடைய அண்ணன் முகமது கமருதீன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை இருந்தது.
இதையடுத்து முகமது ரியாசுதீன் தனக்கு தரவேண்டிய பணத்தை, ஜமாத் மூலம் முகமது கமருதீனிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகரை சேர்ந்த ரிஸ்வானா என்ற பெண் முகமது ரியாசுதீனை செல்போனில் தொடர்புகொண்டு கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் தனியார் பள்ளி அருகில் உள்ள உங்களுடைய வீட்டுமனையை நான் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி அவரை வரவழைத்தார்.
ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்
இதை உண்மை என்று நம்பிய முகமது ரியாசுதீன், கள்ளக்குறிச்சி புறவழிச்சாலைக்கு சென்று ரிஸ்வானாவிடம் தனக்கு சொந்தமான நிலத்தை காண்பித்தார். உடனே அவர் எனது கணவர் பைபாஸ் சாலையில் நிற்கிறார். வாருங்கள் அவரிடம் விலை பேசிக்கொள்ளலாம் என்று கூறி முகமது ரியாசுதீனை காரில் அழைத்துச் சென்றார். சிறிது தூரம் சென்றதும் 3 மர்மநபர்கள், அந்த காாில் ஏறினார்கள். அப்போது அவர்கள் திடீரென கத்தியால் முகமது ரியாசுதீனின் தொடையில் குத்தி ரூ.10 லட்சம் தர வேண்டும், இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தற்போது என்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறினார்.
செல்போன், பணம் பறிப்பு
பின்னர் அந்த மர்ம நபர்கள் முகமது ரியாசுதீனிடம் இருந்த செல்போன், ‘ஏ.டி.எம். கார்டு’, ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை பறித்தனர். ‘போன் பே’ செயலி மூலம் ரூ.2 லட்சத்தை தங்களது வங்கி கணக்குக்கு மாற்றிக்கொண்டதோடு வருகிற 4-ந் தேதி மேலும் ரூ.2 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டி உளுந்தூர்பேட்டை செஞ்சிமாதேவி அருகே முகமது ரியாசுதீனை இறக்கி விட்டு சென்றனர்.
இதன் பின்னர் கடந்த 4-ந் தேதி முகமது ரியாசுதீனை செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர்கள் கள்ளக்குறிச்சி பைபாஸ் சாலையில் உள்ள இனிப்பு கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மொபட்டின் டேங்க் கவரில் பணத்தை வைத்து விட்டு செல்லும்படி கூறினர். இதனால் பயந்து போன முகமது ரியாசுதீன், மர்மநபர்கள் கூறியபடி குறிப்பிட்ட இடத்தில் நின்ற மொபட்டின் டேங்க் கவரில் ரூ.2 லட்சத்தை வைத்தார். அப்போது அந்த மொபட் தனது அண்ணன் முகமது கமருதீன் மகன் முகமது நஸ்ருதீனுக்கு சொந்தமானது என்பது, முகமது ரியாசுதீனுக்கு தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதனால் சந்தேகம் அடைந்த அவா், இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முகமது ரியாசுதீனுக்கும், அவரது அண்ணன் முகமது கமருதீனுக்கும் இடையே உள்ள முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது.
7 பேர் கைது
இது தொடர்பாக முகமது நஸ்ருதீன்(23), தியாகதுருகத்தை சேர்ந்த ரஷித்கான் மகன் சாகுல்கான்(23), ராமச்சந்திரன் மகன் மனோஜ்குமார்(26), அரசாங்கம் மகன் மணி(23), அஜிஸ் மகன் நிஷார்(20), சாத்தபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அசலன் மகன் சுரேஷ்(23), க.மாமனந்தல் கிராமத்தை சேர்ந்த ஜாபர்அலி மகன் இப்ராஹிம்(24), கள்ளக்குறிச்சியை சேர்ந்த 18 வயது வாலிபர் மற்றும் அடையாளம் தெரிந்த ஒரு பெண் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் முகமது நஸ்ருதீன், சாகுல்கான், மனோஜ்குமார், சுரேஷ், மணி, இப்ராஹிம், நிஷார் ஆகிய 7 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், இருசக்கர வாகனம் மற்றும் ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் தனியார் பள்ளி நிர்வாகியை கடத்தி ரூ.4 லட்சம் பறித்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story